ரன்வீர் சிங், அக்‌ஷய் கண்ணா நடித்துள்ள துரந்தர் திரைப்படத்தைத் தடை செய்ய சர்வதேச சமூகத்தை அணுகுவதற்குத் தேவையான பணம் தன்னிடம் இல்லை என்று, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவருமான நபில் காபோல் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் அந்த வீடியோவில், துரந்தர் திரைப்படத்தில் தன்னை ஒத்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, நபில் காபோல் குறை மற்றும் நகைச்சுவை கலந்த பதிலளித்தார். “எனது முக்கியமான கதாபாத்திரம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அதில் எனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரம் ஒரு ‘தபாங்’ (பயமற்ற) நபராகக் காட்டப்பட்டுள்ளது. எனது உண்மையான உருவத்தைப் படம் சரியாக வெளிப்படுத்தவில்லை. மேலும், லியாரி பகுதியை பயங்கரவாத மையமாகக் காட்டியுள்ளனர். இப்படத்தைத் தடை செய்ததற்காக வளைகுடா நாடுகளுக்கு நன்றி,” என்று அவர் தெரிவித்தார்.

இதனை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் சென்று தடை கோரப்போகிறீர்களா என்ற கேள்விக்கு, காபோல் சிரித்தபடியே, “சர்வதேச சமூகத்தை அணுக நிறைய பணம் தேவை. என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை,” என்று வெளிப்படையாக கூறினார்.

துரந்தர் திரைப்படத்தில், நபில் காபோலை ஒத்த கதாபாத்திரம் ‘ஜமில் ஜமாலி’ என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது. அந்த வேடத்தில் நடிகர் ராகேஷ் பேடி நடித்துள்ளார். ஜமாலியின் மருமகன் இந்திய உளவாளி என காட்டப்படுவது, ஏற்கனவே சர்ச்சைக்குரிய கதைக்களத்திற்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், நிஜ வாழ்க்கை புவிசார் அரசியல் பதட்டங்கள், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) மேற்கொண்டதாக கூறப்படும் ரகசிய நடவடிக்கைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஆபரேஷன் லியாரி’, 2008 மும்பை தாக்குதல் சம்பவங்கள், கராச்சியில் குற்றவியல் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவை கதையின் பின்னணியாக உள்ளன.

அரசியல் ரீதியாக உணர்திறன் மிக்க உள்ளடக்கம் காரணமாக, துரந்தர் திரைப்படம் பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தானில் திருட்டுத் தளங்கள் மூலம் இப்படம் பரவலாகப் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.