கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 67 வயது ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர், தனது 70 வயது கணவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கடந்த 1983-ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதியினருக்கு இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தனது கல்வித் தகுதி மற்றும் புகழைப் பிடிக்காத கணவர், தனது சொத்துக்கள் மற்றும் ஓய்வூதியப் பணத்தை அடையும் நோக்கில் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகவும், கடந்த நவம்பர் 22-ஆம் தேதி தன்னை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தப் பேராசிரியை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் செயலை எதிர்த்தபோது, கணவர் தனது கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாகவும், இரு மகன்களையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேராசிரியையின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட தன்னைத் தொடர்ச்சியாக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வரும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் கோவிந்தராஜ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 70 வயது முதியவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.