தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கணவருடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த தாய், தனது 7 வயது மகளை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ள கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்காஜ்கிரி பகுதியைச் சேர்ந்த டேவிட் மற்றும் மோனாலிசா தம்பதியினருக்கு 10 வயதில் ஒரு மகனும், ஷெரோன் மேரி என்ற 7 வயது மகளும் உள்ளனர்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வந்த மோனாலிசா, திங்கட்கிழமை அன்று தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த நேரத்தில் ஷெரோன் தாயின் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
ஏற்கனவே கணவருடனான சண்டையில் மிகுந்த ஆத்திரத்தில் இருந்த மோனாலிசா, “உன்னை கொன்றுவிட்டு நானும் செத்துவிடுகிறேன், அப்போதுதான் இந்தப் பிரச்சனைகள் தீரும்” என்று கூறி சிறுமியை மாடியிலிருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை தந்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தாய் மோனாலிசாவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறு கோபத்தால் தாயே தன் மகளைக் கொன்ற இச்சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
