உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில், மாற்று மத திருமணம் தொடர்பான குடும்பத் தகராறில், ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரையும் அவரது மனைவியையும் மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜபராபாத் பகுதியைச் சேர்ந்த ஷியாம் பகதூர் (62) ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். அவரது மனைவி பபிதா (60). இந்த தம்பதிக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அவர்களது மகன் அம்பேஷ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனை ஷியாம் பகதூரும் பபிதாவும் ஏற்காததால், குடும்பத்திற்குள் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமணத்துக்குப் பிறகு, அம்பேஷ் மற்றும் அவரது மனைவி வீட்டில் அனுமதிக்கப்படாததால், அவர்கள் தனியாக வசித்து வந்துள்ளனர். இரு குழந்தைகள் பிறந்த பின்னரும் கூட, பெற்றோர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை. மனைவியை பிரிந்து வந்தால் மட்டுமே மீண்டும் ஏற்றுக்கொள்வோம் என பெற்றோர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, விவாகரத்து செய்வதாக இருந்தால் ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என அம்பேஷின் மனைவி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த 8-ந் தேதி அம்பேஷ் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்ததால், குடும்பத்திற்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த அம்பேஷ், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தனது தாயின் தலையில் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற முயன்ற தந்தை ஷியாம் பகதூரையும் அதே ஆயுதத்தால் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பின்னர், குற்றத்தை மறைக்க பெற்றோரின் உடல்களை சாக்குப் பையில் அடைத்து அப்புறப்படுத்த திட்டமிட்ட அம்பேஷ், வீட்டில் இருந்த ரம்பத்தை பயன்படுத்தி உடல்களை ஆறு துண்டுகளாக அறுத்து, அவற்றை சாக்குப் பையில் கட்டி அருகிலுள்ள ஆற்றில் வீசியுள்ளார்.
இதன் பின்னர், சந்தேகம் வராமல் இருக்க, தனது சகோதரி வந்தனாவை செல்போனில் தொடர்பு கொண்டு, தாய், தந்தை காணாமல் போய்விட்டதாக நாடகமாடியுள்ளார். அதன் பின்னர் அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவான அவர், ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் ஜான்பூருக்கு திரும்பியுள்ளார்.
இதையடுத்து, கடந்த 13-ந் தேதி வந்தனா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். சந்தேகத்தின் அடிப்படையில் அம்பேஷிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பெற்றோரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அம்பேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆற்றில் வீசப்பட்ட சாக்குப் பையை மீட்டுள்ளனர். அதில் சில உடல் பாகங்கள் காணாமல் போயிருந்ததாகவும், அவற்றை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
