திருவாரூர் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி, பள்ளிக்குச் செல்லும் போது பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்த ஸ்ரீதர் (44) என்ற நபரிடம் தனது புத்தகப் பையை கொடுத்துள்ளார்.
அந்த சமயத்தில் ஸ்ரீதர் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி உடனடியாக சக பயணிகளிடம் இது குறித்து முறையிட்டார். ஆத்திரமடைந்த பயணிகள் ஸ்ரீதரைப் பிடித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தனர். பொதுப் போக்குவரத்தில் மாணவிக்கு நேர்ந்த இந்த அவலம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
