திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 29-ம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற பிரம்மாண்டமான மேற்கு மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவின் எஃகு கோட்டையாகத் திகழும் மேற்கு மண்டலத்தில் இந்த மாநாடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என்று குறிப்பிட்டார்.
மேலும் சுமார் 1.50 லட்சம் பெண்கள் பங்கேற்க உள்ள இந்த மாநாடு முழுக்க முழுக்க மகளிரால் மட்டுமே நடத்தப்படுவதாகவும், அரங்கிற்குள் ஆண்களுக்கு அனுமதி இன்றி மகளிரின் எழுச்சிக் கோட்டையாக இது திகழும் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றிக் கண க்கை மேற்கு மண்டலத்திலிருந்தே தொடங்குவதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும் என்று செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்த மாநாட்டில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் ஆண்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது நடைபெறவுள்ள இந்த மகளிர் மாநாடு திமுகவின் தேர்தல் வெற்றிப் பாதையை மேலும் வலுப்படுத்தும் என அவர் கூறினார்.
