கேரளாவில் ஒரு நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், எட்டு வருட விசாரணைக்குப் பிறகு, ஆறு குற்றவாளிகளுக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் உட்பட நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பு பல்வேறு தரப்பினரிடையே கண்டனத்தை எழுப்பியுள்ள நிலையில், கேரள அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையும், நடிகை மஞ்சு வாரியரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். மஞ்சு வாரியர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நீதிமன்றத்தின் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு இன்னும் முழுமையாக நீதி கிடைக்கவில்லை. குற்றம் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடூரச் செயலைத் திட்டமிட்டு வழிநடத்திய ‘மாஸ்டர் மைண்ட்’ யார் என்று தெரியாவிட்டாலும், அவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவது அச்சமூட்டுகிறது,” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் மற்றும் இயக்குநர் அமீர், “பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம். தீர்ப்புகள் எல்லாம் நீதி ஆகிவிடாது. மஞ்சு வாரியரின் பக்கமே நான் நிற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
