ஈரோட்டில் வரும் 18-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். திருச்செங்கோட்டில் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் ஆம்புலன்ஸும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்று ஈரோட்டில் நடைபெற உள்ள செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொள்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை (மொத்தம் 2 மணி நேரம்) அனுமதி அளித்துள்ளனர். கரூர் மற்றும் புதுச்சேரிக்குப் பிறகு தமிழ் மண்ணான ஈரோட்டில் விஜய் கால் வைக்கிறார். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் 10,000 கழகத் தொண்டர்களும், 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறை விதிமுறைகளின்படி, ஆம்புலன்ஸ், கண்காணிப்புக் கேமரா, குடிநீர், கழிப்பறை வசதிகள், விஜய் வருவது மற்றும் பொதுமக்கள் வந்து செல்லத் தனி இடங்கள் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றும் செங்கோட்டையன் கூறினார். மக்கள் விரும்பும் தூய்மையான மற்றும் மக்கள் சக்தியால் வரும் ஆட்சி மலரும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.