தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள அரசு அன்னை சத்யா விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவனை, அதே விடுதியில் பயிலும் பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர், 10-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் என மொத்தம் 4 பேர் சேர்ந்து கடந்த சில மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், சிகரெட் புகைக்கக் கட்டாயப்படுத்தியும் அவர்கள் துன்புறுத்தி வந்துள்ளனர்.
மாணவர்களின் தொடர் தொல்லையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவன், தனது பெற்றோரிடம் இதுகுறித்துத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவனின் பெற்றோர் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியலிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை செய்த 4 மாணவர்களும் விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், குழந்தைகள் உதவி மைய அலுவலர் அளித்த புகாரின் பேரில், தஞ்சை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். நடந்த சம்பவங்கள் உண்மை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து, அந்த 4 மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டுத் தஞ்சை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
