ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 54 வயது குரு நாராயணமூர்த்தி என்பவர், கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சாலையில் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரம்பத்தில் இது சாலை விபத்தாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், நாராயணமூர்த்தியின் உடலில் இருந்த காயங்கள் கொலைக்கான சாத்தியக்கூறுகளைக் காட்டியதால், காவல்துறை இந்த வழக்கைச் சந்தேக மரணமாகப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் ஒரு பகுதியாக, 6 மாதங்களுக்கு முன்பு நாராயணமூர்த்தியின் பெயரில் பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து சுமார் ஒரு கோடியே எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீட்டுப் பத்திரங்கள் எடுக்கப்பட்டிருப்பதைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

காப்பீட்டுத் தொகையை அடைய வேண்டும் என்ற பேராசையே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. நாராயணமூர்த்தி இறந்தால் காப்பீட்டுப் பணம் தங்களுக்குக் கிடைத்துவிடும் என்ற திட்டத்துடன், அவரது மருமகன் சுன்கரி மற்றும் பேரன் சுன்கரி ஜோதி பிரசாத் ஆகிய இருவரும் சேர்ந்து இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மருமகனையும் பேரனையும் கைது செய்தனர். மேலும், இந்தக் கொலைக்கு உதவியாக இருந்த ஆயுள் காப்பீட்டு முகவர் நானாஜி மற்றும் ததாஜி என்ற மற்றொரு நபரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். பணம் என்னும் பேராசையில் அரங்கேறிய இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.