பிரபல வீடியோ தளமான யூடியூப், இன்றைய காலகட்டத்தில் உலகளவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தத் தளத்தைப் பயன்படுத்தாத இணையவாசிகளே இல்லை என்று கூறும் அளவிற்கு, இது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துவிட்டது. பாடல்கள், திரைப்படங்கள், சுவாரஸ்யமான தகவல்கள் என ஒரு வீடியோ களஞ்சியமாக விளங்கும் யூடியூப்பை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இதில் உள்ளடக்கங்களை உருவாக்கும் கிரியேட்டர்களுக்கு கணிசமான தொகையை வருவாயாக வழங்குவதால், பலரும் வீடியோக்களைப் பதிவேற்றி இதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.

தற்போதைய நவீன தொழில்நுட்ப உலகில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களின் எண்ணிக்கையும் யூடியூப் தளத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த அதிநவீன மாற்றத்தால், தங்களுக்குத் திரையில் தோன்றும் ஒரு வீடியோ உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்ற குழப்பமும், சந்தேகமும் தற்போது சாதாரண பயனர்களிடையே பரவலாக எழுந்து வருகிறது. யூடியூப் தளம் தற்போது இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களின் கீழே “AI ஆல் உருவாக்கப்பட்டது என்ற லேபிளைத் தானாகவே காட்டும் வசதியைக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், நெட்டிசன்கள் எந்தவொரு குழப்பமுமின்றித் திரையில் தோன்றும் வீடியோவின் உண்மைத்தன்மையை நொடியில் கண்டறிந்து கொள்ள முடியும். இப்புதிய தொழில்நுட்பம் இணைய உலகில் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதில் ஒரு முக்கியப் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது