ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பரபரப்பான ரயில் பாதை அருகே, இரண்டு சிறுவர்கள் செய்த ஆபத்தான சாகசத்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. புதன்கிழமை மாலை 7:30 மணியளவில், அவர்கள் ஏரோசால் (Aerosol) ஸ்ப்ரே கேனை வெடிக்கச் செய்தனர். இதனால், திடீரெனப் பெரிய நெருப்புப் பந்து (Fireball) கிளம்பி, அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. சத்தம் கேட்டவுடன் போலீஸார் விரைந்து வந்து, வெடிப்பதற்கு கேன் பயன்படுத்தப்பட்டது என்று கண்டுபிடித்தனர்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கேனில் தீ பிடித்தவுடன், அந்தச் சிறுவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. என்றாலும், போலீஸார் 17 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களையும் உடனடியாகக் கைது செய்தனர். ஆன்லைனில் கவனம் பெறுவதற்காகவே அவர்கள் இப்படிச் செய்ததாகத் தெரிகிறது. ‘சட்டவிரோதமாக வெடிபொருளைப் பயன்படுத்தியதாக’ அவர்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
