சென்னையைச் சேர்ந்த அருண்மொழி என்ற நபர், ஆன்லைன் திருமணத் தகவல் மையங்கள் மூலம் 20-க்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதுப் பெண் ஒருவர், திண்டிவனம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், அருண்மொழி தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி இருசக்கர வாகனம், ஐபோன் மற்றும் ஜி.பே. மூலம் ரூ.12 லட்சம் பெற்றதாகவும், பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்த அருண்மொழிக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி, மூன்று குழந்தைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், தான் திருமணம் ஆனதை மறைத்து, ஐ.டி. கம்பெனி நடத்தி வரும் இன்ஜினீயர் என்று பொய் கூறி, சுமார் 20 பெண்களை ஆசை வலையில் வீழ்த்தி உள்ளார்.
அவரது கெட்டப்புக்கும் செட்டப்புக்கும் மயங்கியே பெண்கள் அவரை நம்பி, சுமார் ரூ.20 லட்சம் வரைப் பணத்தையும் நகைகளையும் இழந்துள்ளனர். இதனையடுத்து, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் அருண்மொழியைச் சென்னையில் கைது செய்த போலீஸார், மோசடியில் ஈடுபட்டதாக அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் ஐபோன் போன்றவைகளை பறிமுதல் செய்துச் சிறையில் அடைத்தனர்.
