எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள மலையாற்றூர் முண்டங்காமட்டம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை தொடங்கினர்.
உடல் 2 நாட்களுக்கு மேலாக கிடந்ததால் அழுகிய நிலையில் இருந்தது. தலை, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்தன. குறிப்பாக தலையின் பின்புறத்தில் ஆழமான காயம் இருப்பதை பார்த்த போலீசார், இது கொலை என சந்தேகித்தனர்.
விசாரணையில், இறந்தவர் முண்டங்காமட்டம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சித்ரபிரியா (19) என்பது உறுதி செய்யப்பட்டது. அவயுடைய தந்தை ஷைஜு வனத்துறையில் தற்காலிக தீயணைப்பு கண்காணிப்பாளராகவும், தாய் ஷைனி கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சித்ரபிரியா பெங்களூருவில் விமானப் பயிற்சி படித்து வந்த மாணவி. விடுமுறை காரணமாக டிசம்பர் 6ஆம் தேதி ஊருக்கு வந்திருந்தார். அதே இரவு தாயுடன் அய்யப்ப சேவா சங்கம் நடத்திய தேசவிளக்கு விழாவில் கலந்து கொண்டார். இரவு 11 மணிக்கு தாய் ஷைனி வீட்டிற்கு திரும்பிய நிலையில், சித்ரபிரியா வீடு திரும்பவில்லை. அன்றிலிருந்து தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்காததால், குடும்பத்தினர் கவலையில் இருந்தனர்.
அதே பகுதியின் CCTV காட்சிகளில் சித்ரபிரியா ஒரு இளைஞருடன் பைக்கில் செல்லும் காட்சி போலீசாருக்கு கிடைத்தது. அவரைத் தொடர்ந்து மற்றொரு பைக்கில் 2 பேர் சென்றதும் பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதில், அந்த இளைஞர் ஆலன் (21) எனும் சித்ரபிரியாவின் காதலன் என்பது தெரியவந்தது.
சித்ரபிரியா காணாமல் போவதற்கு முன்பும் இருவரும் பலமுறை தொலைபேசியில் பேசியதையும் சித்ரபிரியாவின் செல்போன் ஆய்வு மூலம் போலீசார் கண்டறிந்தனர்.
ஆலனை விசாரித்த போது ஆரம்பத்தில் “சித்ரபிரியாவை அங்கு இறக்கிவிட்டு வந்தேன்” என கூறினார். இதையடுத்து போலீசார் அவரை விடுவித்தனர். எனினும் அவரது வாக்குவாதங்களில் முரண்பாடுகள் இருப்பதை கவனித்த போலீசார் மீண்டும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
கடுமையான விசாரணையின் போது அலன், சித்ரபிரியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தில்,
“சித்ரபிரியாவுக்கு மற்றொரு வாலிபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, அதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. மதுபோதையில் ஆத்திரம் கொண்டு கல்லால் தாக்கினேன். அவர் அங்கேயே உயிரிழந்தார்” என தெரிவித்துள்ளார்.
போலீசார், கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த ரத்தக்கறை படிந்த கல்லை சான்றாக மீட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட பலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவியை காதலன் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம், கொச்சி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
