ஜெய்ப்பூரில் நடைபெற்ற ‘யூத் பார்லிமென்ட்’ (Youth Parliament) நிகழ்வில், யுவராஜ் சௌத்ரி என்ற சிறுவன், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியின் எம்.பி-யும், புகழ்பெற்ற நடிகருமான ரவி கிஷனின் தனித்துவமான பேசும் ஸ்டைலை அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலித்து அசத்தியுள்ளார். அந்த நிகழ்வில் ‘பிராட்காஸ்டிங் சர்வீசஸ்’ (Broadcasting Services) குறித்த விவாதத்தின் போது, அந்தச் சிறுவன் ரவி கிஷன் பேசுவது போலவே ஸ்டைலாகப் பேசியதைக் கண்டு, அங்கிருந்த ஒட்டுமொத்த சபையும் சிரிப்பலையிலும் கைதட்டல்களிலும் மூழ்கியது.
ரவி கிஷனின் அந்த ‘கெத்து’ குறையாத பேச்சை, அந்தச் சிறுவன் இவ்வளவு தத்ரூபமாகக் கொண்டு வந்தது அனைவரையும் வியக்க வைத்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பார்த்த ரவி கிஷன், அந்தச் சிறுவனின் அபாரமான திறமையைக் கண்டு அசந்து போனார். தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் அந்த வீடியோவைப் பகிர்ந்து, யுவராஜுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
प्रिय युवराज चौधरी नेशनल यूथ पार्लियामेंट, जयपुर (तृतीय संस्करण 2026) में मेरे संसदीय व्यक्तित्व का प्रतिनिधित्व जिस आत्मविश्वास, गरिमा और प्रभावशाली शैली से आपने किया, उसके लिए आपको हार्दिक बधाई एवं शुभकामनाएँ।
सदन में आपके प्रभावशाली वक्तव्य, विषय की समझ और उत्कृष्ट प्रस्तुति… pic.twitter.com/srbsHMwA8f
— Ravi Kishan (@ravikishann) July 7, 2026
“இந்தத் தேசிய யூத் பார்லிமென்ட்டில் (2026), என்னுடைய நாடாளுமன்ற ஆளுமையை இவ்வளவு தன்னம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும், ஸ்டைலுடனும் பிரதிபலித்த உனக்கு எனது வாழ்த்துகள். உன் பேச்சுத்திறனும், விஷயங்களை உள்வாங்கிக்கொண்ட விதமும் என்னைக் கவர்ந்தது,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ‘யுவா சாதி ஆர்கனைசேஷன்’ மற்றும் ‘மஞ்ச் மினிஸ்ட்ரி’ இணைந்து நடத்திய இந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வு, நாட்டின் ஜனநாயக மதிப்புகளையும், நாடாளுமன்ற மரபுகளையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
