உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை மாலை நெஞ்சை உலுக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு அங்குள்ள டயாலிசிஸ் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, அவரது நிலைமை மோசமடைந்ததால், அவரை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (Emergency Ward) அவசரமாக மாற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். டயாலிசிஸ் பிரிவில் இருந்து அவசர சிகிச்சைப் பிரிவு வளாகத்திற்குள்ளேயே வெறும் 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

​இதற்காக அங்கிருந்த ஆம்புலன்ஸ் டிரைவரிடம் குடும்பத்தினர் உதவி கேட்டுள்ளனர். ஆனால், அந்த 400 மீட்டர் தூரத்திற்கு வர முடியாது என ஆம்புலன்ஸ் டிரைவர் கொடூரமான முறையில் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவரை ஒரு ஸ்ட்ரெச்சரிலேயே (Stretcher) படுக்க வைத்து அவசர அவசரமாக அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடியுள்ளனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக உரிய நேரத்திற்குள் கொண்டு செல்ல முடியாததால் அந்த இளம்பெண் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, மருத்துவக் கல்லூரி நிர்வாகம் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.