கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம், கிருஷ்ணராஜபேட்டை தாலுக்காவில், மதுபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், ஒரு தனியார் பள்ளிப் பேருந்தை மறித்து, அதில் பயணம் செய்துகொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரை கட்டாயப்படுத்தி பேருந்திலிருந்து கீழே இறங்கச் சொல்லி அட்டூழியம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை பசவனஹள்ளி-வடதரஹள்ளி சாலையில் நடந்துள்ளது. கிக்கேரி பகுதியிலிருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை, இளைஞர்கள் வழிமறித்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓட்டுநர் தனது கைப்பேசியில் பதிவுசெய்த இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கிரிஷ்(20), கிரண்(20) என்று அடையாளம் காணப்பட்ட இந்த இளைஞர்கள், கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அவர்கள் பேருந்து ஓட்டுநரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பள்ளி ஊழியர்களுக்கு மிரட்டலும் விடுத்து, பேருந்தில் இருந்த மாணவர்களிடையே பீதியை ஏற்படுத்தினர். தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், மண்டியா மாவட்டக் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கிக்கேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இதுபோன்ற நடத்தைகள் சகித்துக் கொள்ளப்படாது என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இரு இளைஞர்களும் போக்சோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கிராமப்புறப் போக்குவரத்துப் பாதைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.