குஜராத் மாநிலம் அகமதாபாத் சேர்ந்த கேசவ் என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையில் சமையல் முறையைச்சார்ந்த கருத்து வேறுபாடு, இறுதியில் விவாகரத்துக்கு வழிவகுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிவந்துள்ளது.
கேசவ்–மனைவிக்கு 2002ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மனைவி, உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் சமையல் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது கணவன் வீட்டாருக்கு விருப்பமில்லாததால், இருபுறமும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
தகராறு தீவிரமான நிலையில், மனைவி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு கேசவ், அகமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், கணவன்–மனைவிக்குமிடையே சமரச வாய்ப்பு இல்லை எனக் குறிப்பிட்டு, விவாகரத்தையும், மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றமும், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநிறுத்தி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
வெங்காயம்–பூண்டு சேர்க்காத சமையல் விவகாரமே திருமண பிரிவுக்குக் காரணமாகி விட்டது என்ற தகவல், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
