குஜராத்தின் ஆட்கோட் பகுதியில், 2012-ஆம் ஆண்டின் ‘நிர்பயா’ வழக்குக்கு இணையான அதிர்ச்சி தரும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதி வயல்வெளியில் பெற்றோர் வேலை செய்து கொண்டிருந்த போது, 6 வயது சிறுமியை கடத்திச் சென்ற ஒரு நபர், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். சிறுமி எதிர்த்து கத்தியதால், ஆத்திரமடைந்த அவர், சுமார் ஒரு அடி நீள இரும்புக் கம்பியை சிறுமியின் பிறப்புறுப்பில் கொடூரமாகச் செருகிவிட்டு தப்பியோடியுள்ளார்.

படுகாயமடைந்த சிறுமி ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக, ராம்சிங் டெர்சிங் (35) என்ற கட்டுமானத் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூரைச் சேர்ந்தவர்.

இவர்மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) மற்றும் இந்திய நீதியியல் சம்ஹிதை (BNS) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் 10 குழுக்கள் அமைத்து 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியதில், சிறுமி அடையாளம் காட்டியதன் பேரில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.