திருப்பூர் மாவட்டம் உத்தமபாளையம் வட்டமலை அணை அருகே உள்ள வனப்பகுதியில், டிசம்பர் 6ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கருகிய நிலையில் கிடந்தது. தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, வெள்ளக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் நடந்த விசாரணையில், கொல்லப்பட்ட பெண் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஏகலனையாம்பாளையம் புதூரைச் சேர்ந்த வடிவுக்கரசி (45) என்பது உறுதி செய்யப்பட்டது. சம்பவத்துக்கு முந்தைய தினம், வடிவுக்கரசியை ஸ்கூட்டரில் அழைத்து சென்ற ஒருவரின் சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் கிடைத்தன. அந்த நபர், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (55) என கண்டறியப்பட்டது.

போலீசார் தேடுதல் நடத்தியபோது, தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியில் பதுங்கி இருந்த சங்கரை கைது செய்தனர். விசாரணையில், 1998ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் காவலர் சங்கர், நான்கு மனைவிகளும் ஆறு குழந்தைகளும் உள்ளவர் என்பதும், வடிவுக்கரசியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. அரசு வேலை செய்து தருவதாக கூறி இருவரும் இணைந்து வடிவுக்கரசியின் உறவினர்களிடமிருந்து பணம் பெற்றதாகவும், அந்த பணத்தைச் செலவு செய்து விட்டதால் தகராறு ஏற்பட்டதாகவும் சங்கர் ஒப்புக்கொண்டார்.

பணம் கேட்டதால் ஏற்பட்ட கோபத்தில், வடிவுக்கரசியை கொலை செய்ய முடிவு செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தத் திட்டத்தின் அடிப்படையில், டிசம்பர் 5ஆம் தேதி வடிவுக்கரசியை தாசநாயக்கன்பட்டிக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் வட்டமலை அணை காட்டுப்பகுதியில் இருவரும் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆத்திரம் அடைந்த அவர், அருகில் இருந்த கருங்கல்லால் வடிவுக்கரசியின் தலையில் அடித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவர் அணிந்திருந்த ஆறு சவரன் நகைகளை எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அடையாளம் காண முடியாத வகையில் முகத்தை சிதைத்து, உடலுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியதாகவும் அவர் ஒப்புக் கொண்டார். மேலும் கைப்பற்றப்பட்ட நகைகள் சான்றாக பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் சங்கரை காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அனுப்பினர்.