தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர வியூகம் அமைத்துச் செயல்பட்டு வருகிறார்.

​இதன் ஒரு பகுதியாக, தி.மு.க.வின் மிக முக்கிய பரப்புரை நிகழ்ச்சியான “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நாளை தொடங்குகிறது. வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் இந்த மாபெரும் பிரசாரம் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற உள்ள கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தி.மு.க. தொண்டர்களை உத்வேகத்துடன் செயல்பட வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யும் பூத் கமிட்டிக் குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.