தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இல்லை என பேசியது, அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் அவரது உரை தொடர்பாக விமர்சனங்கள் மும்முரமாக எழுந்துள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பறப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், தவெக தலைவர் விஜய் மாவட்ட ரீதியான மக்கள் சந்திப்புகளில் பங்கேற்று திமுக, பாஜக ஆகியவற்றை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அந்த வரிசையில், இன்று (டிசம்பர் 9) புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அவர் பேச்சாற்றும் போது, புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இல்லை என குறிப்பிட்டார்.
ஆனால், அந்தக் குறிப்பே சர்ச்சைக்கு தள்ளிவிட்டது. உண்மையில் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருவது பதிவுகளிலும், அரசின் அறிவிப்புகளிலும் உறுதிப்படுத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு மூடப்பட்ட ரேஷன் கடைகள், பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு முதல் மீண்டும் திறக்கப்பட்டு, அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
2016-ல் இலவச அரிசி திட்டத்தில் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அரிசி விநியோகம் நிறுத்தப்பட்டு, மத்திய அரசு நேரடியாக வங்கிக் கணக்கில் தொகை செலுத்தும் முறைக்கு மாற்றப்பட்டது. இந்த முறை மக்களுக்கு போதாமை எனக் கூறப்பட்ட நிலையில், ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. முதல்வர் ரங்கசாமி தேர்தல் வாக்குறுதியாக இதனை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜய் தெரிவித்த “ரேஷன் கடைகள் இல்லாத இடம் புதுச்சேரி” என்ற கூற்று அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “விஜய் வரலாறு தெரியாமல் தவறான தகவலை கூறியுள்ளார். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன. உண்மை தெரியாமல் பேசுவது அர்த்தமற்றது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் விஜயின் இந்தப் பேச்சு தொடர்ந்தும் அரசியல் விவாதத்திற்கு தள்ளப்படும் நிலையில், சோசியல் மீடியாவில் இதுகுறித்து கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றன.
