தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் நெருங்கிய நம்பிக்கையாளர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருபவர் புஸ்ஸி ஆனந்த். ஒரு சாதாரண ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்த இவர், இன்று தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த என். ஆனந்த், அங்குள்ள புஸ்ஸி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ என்பதால் ‘புஸ்ஸி ஆனந்த்’ என்று அழைக்கப்படுகிறார். 2006-ஆம் ஆண்டு புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சிகளுடன் நெருக்கம் காட்டிய இவர், பின்னர் முழுமையாக விஜய் மக்கள் இயக்கத்தில் இணைய விரும்பினார்.

விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரால், விஜய் மக்கள் இயக்கத்தின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆனந்த், அயராத உழைப்பின் மூலம் விஜயின் நம்பிக்கையைப் பெற்று, அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக உயர்ந்தார். 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் 115 இடங்களை வெல்ல ஆனந்த் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.

விஜய் எங்கு சென்றாலும் நிழலாகப் பின்தொடரும் நபராகவும், தொண்டர்கள் உடனான ஒருங்கிணைப்பிலும், களநிலவரங்களை விஜயிடம் தெரிவிப்பதிலும் அவர் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார். சில நேரங்களில் இவரது நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், விஜயின் நம்பிக்கைக்குரிய நபராகவே திகழ்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் கடந்த பிப்ரவரி 2024-ல் தொடங்கப்பட்ட போது, அதன் பொதுச் செயலாளராகவும் ஆனந்த் நியமிக்கப்பட்டார். கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்து மற்றும் அடுத்து எழுந்த சட்ட சிக்கல்களைச் சமாளிப்பதில் அவர் முக்கிய பங்காற்றுகிறார். சமீபத்தில் தொண்டர்கள் இவர் காலில் விழுந்த வீடியோ வெளியாகி சர்ச்சை எழுந்தது. மேலும், சில மூத்த நிர்வாகிகளை அவர் பதவியிலிருந்து நீக்கியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. எதுவாயினும், விஜய் தன்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் இழக்காமல் தொடர்ந்தும் கட்சியின் மையச் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தி வருகிறார்.