திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர் பகுதியில் உள்ள ஒரு வளைவில், அரசுப் பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (டிசம்பர் 7) விபத்துக்குள்ளானது.

திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், மன்னார்குடியில் இருந்துத் திருத்துறைப்பூண்டிக்கு வந்த தனியார் பேருந்தும் கண் இமைக்கும் நேரத்தில் மோதியதில், இரண்டு பேருந்துகளின் முன்பகுதியும் பலத்தச் சேதமடைந்தது.

இந்தக் கோர விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்துப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் மக்களிடையேப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.