பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்திலுள்ள சதர் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவில் விநோதமான ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு, பூசாரி ஒருவர் ருத்ராட்சம் மாலைகளைப் பயன்படுத்தி, பேயோட்டும் சடங்குகளைச் செய்துள்ளார்.

இந்த நிகழ்வு, மருத்துவமனையிலிருந்த மற்ற நோயாளிகளையும் அவர்களின் உறவினர்களையும் பெரும் திகைப்பில் ஆழ்த்தியது. மேலும் ஆச்சரியப்படும் விதமாக, இந்தச் சடங்கை நிறுத்துவதற்கு ஒரு மருத்துவமனை ஊழியர்கூட முயற்சிக்கவில்லை. சமஸ்திபூர் சதர் மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

“>

 

இந்த வீடியோவில் பூசாரி ஒருவர் மருத்துவமனைக்குள் பகிரங்கமாக பேயோட்டும் சடங்கில் ஈடுபடுவது தெரிகிறது. இது மருத்துவமனை நிர்வாகத்தின் பெரும் அலட்சியத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த சடங்கு நீண்ட நேரம் நீடித்தபோதிலும், யாரும் பூசாரியைத் தடுக்கவில்லை.

இந்தக் காணொலி தீவிரமாகப் பரவிய பிறகு, சுகாதாரத் துறை ஊழியர்கள் இது வெறும் மூடநம்பிக்கை சார்ந்த நிகழ்வு எனக் கூறியதுடன், நோயாளியின் சிகிச்சை விஞ்ஞான முறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

தகவல்களின்படி, அந்தப் பெண் நோயாளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், அவரது உறவினர்கள் சிகிச்சைக்கு இடையிலேயே பேயோட்டும் சடங்கை நிகழ்த்தத் தொடங்கியுள்ளனர். வயிற்றுவலி காரணமாக கடந்த வியாழக்கிழமை அன்று அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.