சட்டப்பூர்வத் திருமண வயதை எட்டாத நிலையில் உள்ள இருவருக்கும் முழுச் சம்மதம் இருந்தால், அவர்கள் ‘லிவ்-இன் உறவில்’ (Live-in Relationship) ஒன்றாக வாழலாம் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அதிரடியானத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்தியாவில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சட்டத்தின் கீழ் வயது வந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். வயது வந்தவர்கள், ஒன்றாகச் சேர்ந்து வாழும் முடிவு உட்படத் தங்கள் தனிப்பட்ட தேர்வுகளைச் செய்யும் உரிமை உண்டு.

ராஜஸ்தானின் கோட்டாவைச் (Kota) சேர்ந்த 18 வயதுப் பெண் மற்றும் அவரது 19 வயது ஆண் நண்பர் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின் போது நீதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார். சட்டப்படி இளைஞர் திருமண வயதை எட்டாததால், அவர்கள் ஒன்றாக வாழ அனுமதிக்கக் கூடாது என்று அரசுத் தரப்பு வாதிட்டது.

இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, லிவ்-இன் உறவுகள் சட்டவிரோதமோ, குற்றமோ அல்ல என்றும், சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்ய முடியவில்லை என்பதற்காக அவர்களது அடிப்படை உரிமைகளைப் பறிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், அவர்களதுப் பாதுகாப்புக் கோரிக்கையை மதிப்பிட்டு, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.