பெங்களூருவில், தான் வாங்கிய கட்டிடமனையில் ஒரு மென்பொருள் பொறியாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முரளி என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், 2018ஆம் ஆண்டு வாங்கிய இடத்தில் வீடு கட்டத் திட்டமிட்டிருந்தார். இவரின் மறைவுக்கு, இரண்டு நபர்கள் அளித்த மன உளைச்சலே காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். நிலத்தை வாங்கிய பிறகு, உஷா நம்பியார், சசி நம்பியார் ஆகிய இருவர், முரளியின் உறவினர் ஒருவரிடம் இருந்து நிலத்தை வாங்கியது தொடர்பாக, அவரிடம் 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

பணத்தைக் கொடுக்க முரளி மறுத்ததால், அவர்கள் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் மற்றும் BBMP அதிகாரிகளைப் பயன்படுத்தி, முரளிக்குத் தொடர்ந்து மன அழுத்தத்தைக் கொடுத்து, பணத்தைக் கொடுக்க வற்புறுத்தியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் தகவலின்படி, முன்னாள் தள பொறியாளரான முரளி, மனைவி துர்காதேவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

டிசம்பர் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து சென்ற முரளி, சுமார் 9:30 மணியளவில் நல்லூர்ஹள்ளியில் உள்ள கட்டிடமனையில், இரும்பு கொக்கியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் வந்துள்ளது. முரளியின் உடலை அந்த இடத்தில் இருந்து மீட்ட போலீசார், விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், வைட்ஃபீல்ட் காவல் நிலைய போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா, 2023 பிரிவுகளான 108, 308(2), 3(5)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, மேல் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.