நம்மில் பலரும் இயற்கை சூழல், அமைதி நிறைந்த ஒரு இடத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் வசிக்க வேண்டும் என்று கனவு காண்பதுண்டு. ஆனால், அது கனவில் மட்டுமே நடக்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு, அயர்லாந்து நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள கெர்ரி கவுண்டியில் அமைந்திருக்கும் ஒரு குட்டித் தீவான ‘கிரேட் பிளாஸ்கெட்’ தீவில் கிடைக்கிறது.

1953ஆம் ஆண்டு முதல் இங்கு மக்கள் நிரந்தரமாக வசிக்கவில்லை என்றாலும், இந்தத் தீவு ஒரு முக்கியச் சுற்றுலாத் தலமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் சுமார் 6,000 முதல் 12,000 வரையிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இந்தத் தீவில் மின்சார வசதி இல்லாமல், இயற்கையான சூழலில் கற்கால வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் தாங்கள் உருவாக்கும் குப்பைகளைத் திரும்பிச் செல்லும்போது தாங்களே எடுத்துச் செல்ல வேண்டும் என்பது இங்குள்ள கண்டிப்பான விதிமுறையாகும். இப்படி வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கவும், அவர்களுக்குத் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து உபசரிக்கவும் இரண்டு பேருக்குக் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் கூடிய ஒரு வேலை வழங்கப்படுகிறது.

இந்தத் தீவில் குடியிருப்புகள் வைத்திருக்கும் குடும்பத்தினரும், தனியார் நிறுவனங்களும் சேர்ந்துதான் இந்த வேலையை வழங்குகின்றன. இந்த இரண்டு பேருக்கும் சம்பளத்துடன் தங்குமிடமும், உணவும் இலவசமாக அளிக்கப்படுகிறது. பொதுவாக, இந்தச் சவால் நிறைந்த பணிக்குக் கணவன்-மனைவியாகவோ அல்லது நண்பர்களாகவோ உள்ள இரண்டு பேர் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு காமில்-ஜேம்ஸ் தம்பதியினர் இந்தச் சேவையைச் செய்துள்ளனர். இந்த வேலைக்கு உலகம் முழுவதிலும் இருந்து யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இது “வரமா? சாபமா?” என்றும், “இப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வேறு எங்கும் கிடைக்காது” என்றும் இந்த வேலை குறித்துச் சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.