பெங்களூரைச் சேர்ந்த ‘நூவி’ (Nuvie) என்ற புரதச் சிற்றுண்டி (Protein Snacks) நிறுவனத்தின் நிறுவனர், தனது பிராண்டை விளம்பரப்படுத்துவதற்காக விமானத்தில் நடுவானில் செய்த தைரியமான செயல் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பிரஷாந்த் என்ற அந்த நிறுவனர், தனது நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ பொறித்த டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு, இண்டிகோ விமானத்தின் நடைபாதையில் நடந்து சென்று பயணிகளிடம் பேசினார்.
தனது பிராண்டை அறிமுகப்படுத்திய அவர், “நாங்கள் பெங்களூரைச் சேர்ந்த புரதச் சிற்றுண்டி பிராண்ட். எங்கள் பிராண்டை வளர்க்க ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முயற்சிகளைச் செய்து வருகிறோம்,” என்று கூறினார். தாம் மிகவும் பதட்டமாக இருப்பதை வெளிப்படுத்திய பிரஷாந்த், பயணிகளை தனது பிராண்டை சமூக ஊடகங்களில் பின் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும், விமானம் தரையிறங்கிய பின் இலவச தயாரிப்பு மாதிரிகளுடன் (free samples) தான் வெளியே காத்திருப்பேன் என்றும், விருப்பமிருந்தால் வந்து முயற்சித்துப் பார்க்கும்படியும் கூறினார்.
பிரஷாந்த்தின் இந்த முயற்சி இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. பலர் அவரது துணிச்சலையும், விடாமுயற்சியையும் பாராட்டி, “இது அவசரம் அல்ல, கனவை நனவாக்கும் உறுதி,” என்று குறிப்பிட்டனர். அதே சமயம், சிலர் “விமானத்தின் அமைதியைக் கெடுக்காதீர்கள், இது போன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது,” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
