மதுரையில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, டிசம்பரில் கூட்டணி அறிவிப்பதாகச் சொன்னீர்களே என்ற கேள்விக்கு, “டிசம்பர் 31 வரை நாள் இருக்கிறது. அதற்குள் அறிவிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் இருக்கிறதா?” என்று பதிலளித்தார். கூட்டணி குறித்துப் பல கட்சிகளிடமிருந்து அழைப்புகள் வந்துள்ளதாகவும், கூட்டணி உறுதியான பின் அறிவிப்பதுதான் சரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் துரோகக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்த அவர், துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால், அது எடப்பாடிக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சொன்னதைப் போல, எடப்பாடி செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் ஏற்கனவே தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இறுதித் தீர்ப்பு எழுதுவார்கள் என்றும் கூறினார்.
அவர் செங்கோட்டையன் பற்றிப் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 2017-ல் தனக்கு ஆதரவளித்து முதலமைச்சராக்கிய 18 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யும் போது, எடப்பாடி பழனிசாமி தொகுதி மக்களிடம் கேட்டாரா என்று தினகரன் கேள்வி எழுப்பினார்.
தற்போது அதிமுக என்ற கட்சியையே இல்லாமல் செய்து, இரட்டை இலைச் சின்னம் கையில் இருக்கிறது என்ற ஆணவத்தில் எடப்பாடி பேசி வருவதாகவும், அவர் அதிமுகவைக் ‘எடப்பாடி அதிமுக’ என்று மாற்றி ஒரு வட்டாரக் கட்சியாகவும், குடும்பக் கட்சியாகவும் மாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்தத் தேர்தலில் மக்கள் அவருக்குச் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும், தொண்டர்கள் 2026 தேர்தலுக்குப் பின் விழித்துக் கொள்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இணைய அழைப்பு வரவில்லை என்றும், ஓ.பி.எஸ். கொடுத்த கெடு பற்றி டிசம்பர் 15 வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.
