சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஜவகாடி தொடக்கப் பள்ளியில் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, எண்ணுவதில் தவறு செய்த இரண்டாம் வகுப்பு மாணவரை, தலைமையாசிரியர் பலமுறை கன்னத்தில் அறைந்ததில், மாணவரின் கண்ணில் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டு முகத்தில் வீக்கம் உண்டானது. பகீரதி என்ற அந்த 6 வயது மாணவர் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கண்ணீருடன் பெற்றோரிடம் நடந்ததைக் கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த பெற்றோர் திரிகுண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும், அந்த ஆசிரியர் தாக்குதல் நடத்திய அன்றும் மதுபோதையில் இருந்ததாகவும், அவர் அடிக்கடி குடிபோதையில் பள்ளிக்கு வருவதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் மணிராம் யாதவ் என்பவர் தலைமை ஆசிரியர் உதய்குமார் யாதவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ராமச்சந்திரபூர் வட்டாரத்தில் உள்ள இந்த ஜவகாடி தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை சுமார் 30-35 மாணவர்கள் படிக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை மதிய உணவுக்குப் பிறகு இரண்டாம் வகுப்பு மாணவர் பகீரதி எண்ணும் பொழுது தவறு செய்ததால், ஆசிரியர் உதய்குமார் கோபமடைந்து இரு கன்னங்களிலும் மாறி மாறி அடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மாணவனுக்குக் கண்ணில் காயம் ஏற்பட்டு, முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தை தனது தலையைக் குனிந்த பிறகும் ஆசிரியர் தொடர்ந்து தாக்கியுள்ளார். இதையடுத்து, மாணவரின் தந்தை தனஞ்சய் யாதவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், திரிகுண்டா காவல் நிலையப் பொறுப்பாளர் ஜவஹர் தீர்க்கி வழக்குப் பதிவு செய்து, சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாகக் கல்வித்துறை சார்பில் வட்டாரக் கல்வி அலுவலர் ஒருவரும் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாவட்ட கல்வி அலுவலர் மணிராம் யாதவ் தெரிவித்துள்ளார்.
