மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் (Ratlam) நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்புப் படித்துவந்த தேசிய அளவிலான ஸ்கேட்டர் (National-level Skater) மாணவர் ஒருவர், பள்ளி வளாகத்தில் மொபைல் போன் (Mobile Phone) பயன்படுத்தியதற்காகப் பெற்றோருடன் பேச அழைக்கப்பட்டபோது, பயத்தில் பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இந்தச் சம்பவம் மாணவர்களின் மனநலப் பாதிப்பின் தீவிரத்தைக் காட்டுவதாக உள்ளது.

ரிஷன் கட்டாரா (Rishan Katara) என்ற அந்த 14 வயது மாணவன், பள்ளி வளாகத்தில் மொபைல் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் (Reels) உருவாக்கியதற்காகப் பள்ளி நிர்வாகம் அவரதுப் பெற்றோரைச் சந்திக்க அழைத்துள்ளது.

பெற்றோர் பள்ளியின் கீழ்த்தளத்தில் காத்திருந்த நிலையில், ரிஷன் திடீரென மாடிக்குச் சென்று குதித்துள்ளார். இதில், அவரது தாடை, இரண்டு கால்கள் மற்றும் முதுகெலும்பில் 8 முதல் 10 முறிவுகள் ஏற்பட்டுள்ளதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், மாணவன் தனது பெற்றோரின் எதிர்வினைக்கு அஞ்சியே இம்முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளனர்.

மேலும், “பள்ளி வளாகத்தில் மொபைல் அனுமதிக்கப்படுவதில்லை” என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேசியப் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருந்த இந்த மாணவனின் தற்கொலை முயற்சி குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.