மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவின் இளைய மகன் அபிமன்யு யாதவுக்கும், மணமகள் இஷிடா யாதவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக அல்லாமல், சமத்துவம், ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட கொண்டாட்டத்தின் அடையாளமாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் மோகன் யாதவ் விருப்பம் தெரிவித்தார்.

இதனை முன்னிட்டு, மாநிலத்தில் நடைபெறும் மெகா திருமண விழாவில், தனது மகனின் திருமணத்தையும் சேர்த்து நடத்துவதாக அவர் அறிவித்திருந்தார். அதன்படி, அபிமன்யுவின் திருமணம் இன்று நடைபெற்றது. அவருடன் மேலும் 21 ஜோடிகள் இணைந்து மொத்தம் 22 ஜோடிகளின் திருமணமும் திருவிழா போல் சிறப்பாக நடைபெற்றது.

 


திருமண விழாவில் எளிமையை முன்னிறுத்தும் வகையில், மணமக்கள் சொகுசு கார்களைத் தவிர்த்து பாரம்பரியமான மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டனர். அபிமன்யுவும் இஷிடாவும் மாட்டு வண்டியில் அமர்ந்து வருவதைப் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் ஆச்சரியத்துடன் பாராட்டினர்.

நிகழ்ச்சியில் 11 மாநிலங்களைச் சேர்ந்த மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எட்டு மாநில ஆளுநர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும், யோகா குரு ராம்தேவ் உள்பட பல சாமியார்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த பிரமாண்ட விழாவில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 25 ஆயிரம் பேர் திரண்டனர். திருமண நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதர்வா ஓட்டலில் பெருமளவில் வரவேற்பு விழா நடைபெற உள்ளது.