மத்தியப் பிரதேசம் மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் உள்ள டோங்ரே நகரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான ஸ்கேட்டிங் வீரர் எனக் கூறப்படும் 13 வயதுடைய அந்தச் சிறுவன், பள்ளியின் விதிமுறையை மீறி மொபைல் போன் கொண்டு வந்து வகுப்பறைக் காட்சியைப் பதிவு செய்து, அதைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டுபிடித்த பள்ளி நிர்வாகம், இது குறித்துப் பேசச் சிறுவனின் பெற்றோரை வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு அழைத்துள்ளது. படுகாயம் அடைந்த அந்தச் சிறுவன் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி சிசிடிவி காட்சிகளின்படி, சிறுவன் முதல்வர் அலுவலகத்திற்குள் நுழைந்து, தான் செய்த தவறுக்காக 4 நிமிடங்களுக்குள் 52 முறை ‘மன்னிப்பு’ கேட்டதாகத் தெரியவந்துள்ளது.

ஆனால், முதல்வர் சிறுவனைப் பார்த்து, “உனது தொழில் வாழ்க்கையை முடித்துவிடுவேன், சஸ்பெண்ட் செய்வேன், உனது பதக்கங்களைப் பறித்துவிடுவேன்” என்று மிரட்டியதாகச் சிறுவன் பின்னர் கூறியுள்ளார். இரண்டு முறை தேசிய அளவில் ஸ்கேட்டிங்கில் பங்கேற்ற அந்தச் சிறுவன், இந்த மிரட்டலைக் கேட்டவுடன் கதறி அழுதுள்ளார். சில நிமிடங்களுக்குப் பிறகு, முதல்வர் அலுவலகத்திலிருந்து வெளியே ஓடிவந்து, மூன்றாவது மாடியில் இருந்து திடீரெனக் குதிக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நடந்த சமயத்தில், சிறுவனின் தந்தை பள்ளியின் காத்திருப்புப் பகுதியில்தான்  அமர்ந்திருந்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெறும் என்றும், சம்பவம் குறித்துத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை ஆட்சியர் ஆர்ச்சி ஹாரித் உறுதிப்படுத்தியுள்ளார்.