தஞ்சாவூரை அடுத்த மேல களக்குடியைச் சேர்ந்தவரும், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தற்காலிக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவருமான காவியா (26), அதே ஊரைச் சேர்ந்த பெயிண்டர் அஜித்குமார் (29) என்பவரைக் கடந்த 13 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.

காவியாவின் பெற்றோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை உறவினர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, கடந்த நவம்பர் 23-ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர். இந்தத் தகவலைக் காவியா, நிச்சயதார்த்தம் முடிந்த பின்பே வீடியோ கால் மூலம் அஜித்குமாருக்குத் தெரிவித்து, புகைப்படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த காதலன்: கொலை செய்யத் திட்டம்!

தான் உயிருக்கு உயிராகக் காதலித்தவளுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்ததை அஜித்குமாரால் ஜீரணிக்க முடியவில்லை. “நாம் இருவரும் பிரிந்துவிடலாம், எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று காவியா கூறியது அஜித்குமாருக்குப் பேரிடியாக இருந்தது.

“நம்மோடு இத்தனை ஆண்டுகளாகப் பழகிவிட்டு இப்போது காவியா வேண்டாம் என்று கூறியது எனக்குக் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது” என்று வாக்குமூலத்தில் அஜித்குமார் தெரிவித்துள்ளார். தான் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவர் இருப்பதை எண்ணி ஆத்திரமடைந்த அஜித்குமார், நேற்று முன்தினம் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தார்.

எனக்குக் கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது:

அப்போது அஜித்குமாரின் மனதில், “தனக்குக் கிடைக்காத காவியா வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, நேற்று காலை காவியா வழக்கம்போல் ஆலங்குடி அரசுத் தொடக்கப் பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்றபோது, தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே அஜித்குமார் காவியாவின் ஸ்கூட்டரை வழிமறித்துள்ளார்.

உனக்கு எப்படி வேறொருவரைத் திருமணம் செய்ய மனம் வந்தது என்று கேட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் தலைக்கேறிய அஜித்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவின் தலையில் சரமாரியாகக் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் காவியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

 பரபரப்பு வாக்குமூலம்!

கொடூரக் கொலையை அரங்கேற்றிய பின்னர், அஜித்குமார் நேராக அம்மாப்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த சம்பவத்தைக் கூறி சரணடைந்தார். பின்னர், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று காவியாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரிடம் அஜித்குமார், “எனது காதலுக்கு இதுபோன்ற நிலை ஏற்படும் என நான் நினைக்கவில்லை. அதனால், மனதைக் கல்லாக்கிக் கொண்டு காவியாவை வெட்டிக் கொன்றேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரைக் கைது செய்துள்ளனர். அஜித்குமாருக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவோம் என்று போலீசார் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் மகள், பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றியவர் காதலை மறந்ததால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.