சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் (ராணி – பெயர் மாற்றப்பட்டுள்ளது) கனடாவில் உள்ள ஒரு பொறியாளரை காதலித்து வந்தார். அவர் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்ததும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த காதலன் ராணியுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.
இதனால் பாதிக்கப்பட்ட ராணி, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம், ராணிக்கு நியாயம் வாங்கித் தருவதாகக் கூறி அவரிடம் பல லட்ச ரூபாய்க்கு வீட்டுத் தேவைக்கான மளிகை மற்றும் ஆடம்பரப் பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கிக் கொண்டார்.
அதே சமயம், காதலனிடமிருந்தும் பணம் பெற்று, அவர் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் பெறவும் உதவி செய்து, அவர் கனடாவிற்கு தப்பிச் செல்ல காரணமாகிவிட்டார். இது ராணிக்கு தெரிய வந்ததும், அவர் இணை கமிஷனர் தீஷா மிட்டலிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு விசாரணை நடத்த நியமிக்கப்பட்டார்.
விசாரணையின்போது, உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு ராணியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அடிக்கடி நள்ளிரவில் மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும், விசாரணை என்ற பெயரில் அலுவலகத்திற்கு அழைத்து அவரது தோளின் மீது கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். ஒரு கட்டத்தில், “நீ அழகாக இருக்கிறாய்… நான் சொல்வதை நீ செய்தால்… நீ சொல்வதை நான் செய்கிறேன்…” என்று ஆபாசமாக பேசி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராணி, மீண்டும் இணை கமிஷனர் தீஷா மிட்டலை சந்தித்து, தனது காதலன், பெண் எஸ்.ஐ. பெனசீர் பேகம் மற்றும் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு ஆகியோர் மீது புகார் அளித்து அழுது புலம்பினார். இந்த விவகாரம் காவல்துறை கமிஷனர் அருண் அவர்களின் கவனத்திற்குச் சென்றது.
இதையடுத்து, கமிஷனர் அருண், உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் எஸ்.ஐ. பெனசீர் பேகம் ஆகிய இருவரையும் அதிரடியாக ‘காத்திருப்போர் பட்டியலுக்கு’ மாற்றி உத்தரவிட்டார். மேலும், இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
