பெங்களூருவின் கிழக்கு பகுதியான நால்லூர்புரம், HAL அருகே, ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் கடந்த நவம்பர் 24 அன்று அரங்கேறியுள்ளது. நித்யா என்ற பெண், தன் மூன்று வயது மகனைத் தண்டிப்பதற்காகச் சூடான இஸ்திரிப் பெட்டியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் தொடர்ச்சியான அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

சிறுவனின் அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் தாயிடம் இது குறித்துக் கேட்டபோது, நித்யா தன் மகன் “அடம் பிடிப்பவன்”, “இது அவனது பழக்கம்” என்று கூறிச் சம்பவத்தை அலட்சியப்படுத்தினார். மறுநாள், சிறுவன் வெளியே வந்தபோது அவனது கன்னத்திலும் மார்பிலும் தீக்காயங்களைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக 112 என்ற போலீஸ் உதவி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.

​உடனடியாகச் சிறுவன் மருத்துவப் பரிசோதனைக்காக பௌரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். நித்யா விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டார். விசாரணையின்போது, மகனைத் தாக்கியதாகவும், சூடான கத்தியால் சுட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். நித்யா தன் கணவரைப் பிரிந்து தனது துணையுடன் வசித்து வருகிறார் என்பது தெரிய வந்தது. சிறுவன் அடிக்கடி கேஸ் ஸ்டவ்வை ஆன் செய்ததால், கோபத்தில் அவனைத் தண்டித்ததாக நித்யா போலீஸிடம் தெரிவித்தார்.

நித்யாவின் துணையைக் குறித்து முதலில் சந்தேகித்த போதிலும், தாக்குதல் நடந்தபோது அவர் சம்பவ இடத்தில் இல்லை என்று பின்னர் தெரிய வந்தது. புகாரின் அடிப்படையில், HAL போலீசார் நித்யா மீது சிறுவர் மீதான தாக்குதல் மற்றும் கொடுமைக்கான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்தச் சிறுவன் மேலதிகப் பராமரிப்புக்காக மாடிவாலாவில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.