மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் காட்கோபர் காவல் நிலையத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் உயிரைப் பதற வைக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்தச் சிறுமியின் தாயாரும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், அச்சிறுமியை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தப் பாலியல் கொடுமை தொடர்ந்து நடந்துள்ளது.
ஒரு கட்டத்தில் இவர்களின் தொல்லையைத் தாங்க முடியாமல், வீட்டை விட்டு ஓடிய சிறுமி, தனது தோழியின் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தாள். வீட்டிற்குத் திரும்பிய சிறுமிக்கு, தாயிடம் இருந்து அடி உதை விழுந்துள்ளது. அதன்பின்னர், மீண்டும் அச்சிறுமியைப் பாலியல் தொழிலில் தள்ளி இருக்கின்றனர். இந்தக் கொடுமைகள் குறித்து சிறுமி தனது தோழியிடம் கூறியிருக்கிறாள். பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பள்ளி ஆசிரியரிடம் தனது துயரங்களை விவரித்தாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர், பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் காட்கோபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் விரைந்து செயல்பட்டு, கற்பழிப்பு (64), விபசாரத் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் குழந்தையை விற்றல் (98) மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
