மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபார் பகுதியைச் சேர்ந்த 15 வயது 10-ம் வகுப்பு மாணவி, பணம் சம்பாதிக்கும் ஆசையில் தன் சொந்த தாயாலேயே பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தாய், தனது ஆண் நண்பருடன் சேர்ந்து இந்த இழிசெயலில் ஈடுபட்டுள்ளார்.
ஆரம்பத்தில் மாணவி இதனை மறுத்தபோதும், தாயின் கடுமையான அடி உதைகளுக்குப் பயந்து, விருப்பமில்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த கொடுமை நடந்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி மூன்று நபர்களிடம் பணம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு பேர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மனமுடைந்த மாணவி தனது பள்ளி ஆசிரியையிடம் அழுது புலம்பி உதவி கோரியுள்ளார்.
மாணவியின் ஆசிரியர், ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள மாணவியின் தாய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
