திருச்சூர் மாவட்டம் வாராந்திரப்பள்ளி அருகே உள்ள மாட்டுமலா பகுதியை சேர்ந்த ஷாரோன் (39) மற்றும் அர்ச்சனா (21) ஆகியோர் ஆறு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அர்ச்சனா தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, சமீபத்தில் ஷாரோன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் அர்ச்சனா தீக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அர்ச்சனா தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என்றும், தீயில் எரிந்த வலி தாங்க முடியாமல் ஓடி கால்வாயில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆரம்ப கட்டமாக போலீஸ் சந்தேகிக்கிறது. உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து அர்ச்சனாவின் தந்தை ஹரிதாஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். “என் மகளை கணவர் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி வந்தனர். கணவன்–மனைவி இடையே பிரச்சினைகள் நீடித்து வந்தன. எனவே என் மகளை எரித்து கொலை செய்திருக்கலாம்” என அவர் புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அர்ச்சனா தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதைத் தெளிவுபடுத்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஷாரோனை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் திருச்சூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
