நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா, பெருங்கடம்பனூரைச் சேர்ந்த ஸ்ரீதர் (36), பட்டதாரியான பரிமளா (34) என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வேலை தேடி ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள காசிபிள்ளாம்பாளையத்திற்கு வந்துள்ளனர். ஸ்ரீதர் அங்குள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்த நிலையில், பரிமளா தனியாக ஸ்டுடியோ மற்றும் இ-சேவை மையம் நடத்தி வந்தார்.

பரிமளா ஸ்டுடியோ நடத்தி வந்தபோது, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பெருமாள்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஸ்ரீதருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவர் அடிக்கடி பணம் கேட்டு மனைவி பரிமளாவுடன் தகராறு செய்துள்ளார். கள்ளக்காதலுக்கு ஸ்ரீதர் இடையூறாக இருந்ததால், அவரைக் கொலை செய்யப் பரிமளா, தனது கள்ளக்காதலன் கார்த்திகேயனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 21-ஆம் தேதி மதுரையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்குச் சென்ற பரிமளாவிடம், ஸ்ரீதரின் தம்பி புகழேந்தி, “அண்ணன் ஏன் வரவில்லை?” என்று கேட்டுள்ளார். அப்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாகப் பரிமளா, “எனக்கும், உனது அண்ணன் ஸ்ரீதருக்கும் ஏற்பட்ட தகராறில் அவரைப் பிடித்துத் தள்ளியதில் அவர் கீழே விழுந்து இறந்துவிட்டார். அவரது உடலை எனது ஆண் நண்பர் கார்த்திகேயனுடன் சேர்ந்து, பெருந்துறை, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள ஒரு புதரில் தூக்கி வீசிவிட்டு வந்துவிட்டேன்” என்று கூறி உள்ளார்.

பரிமளாவின் வாக்குமூலம் குறித்து ஸ்ரீதரின் தம்பி புகழேந்தி அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள புதரில் கிடந்த ஸ்ரீதரின் சடலத்தை மீட்டனர். போலீஸ் விசாரணைக்கு அஞ்சித் தலைமறைவான பரிமளாவையும், கார்த்திகேயனையும் 2 தனிப்படை போலீசார் நேற்று காலை பெருந்துறை-கோவை சாலை, பெரியவேட்டுவபாளையம் பிரிவு அருகே வைத்து கைது செய்தனர். ஸ்ரீதருக்கு மதுப்பழக்கம் இருந்ததால் வேலைக்குச் செல்லாமல் தகராறு செய்ததே கொலைக்குக் காரணம் என்று பரிமளா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.