அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டைலர் நகரில், செல்லப் பிராணிகளைக் கவனித்து வந்த 23 வயதுப் பல்கலைக்கழக மாணவி, நாய்கள் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பக் கல்வித் துறையில் இளங்கலை பட்டம் பெற்று, இன்னும் ஆறு மாதங்களில் பட்டப்படிப்பை முடிக்கவிருந்த மேடிசன் ரிலே ஹல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெளியூர் சென்றிருந்த வீட்டின் உரிமையாளர்களின் மூன்று பிட்புல் நாய்களை ஹல் கவனித்து வந்துள்ளார்.

பல வாரங்களாக அந்த நாய்களைக் கவனித்துவந்ததால், அவற்றை வளர்ப்பது சாதாரண சூழலாக இருக்கும் என்று அவர் நினைத்துள்ளார். ஆனால், நவம்பர் 21 அன்று மாலை 4:15 மணியளவில், நாய்களை வீட்டிற்குள் அழைத்து வர ஹல் முயன்றபோது, அந்த மூன்று நாய்களும் பின்புறத் தோட்டத்தில் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளன. நாய்கள் தாக்கும் சத்தம் கேட்டு அருகில் இருந்த அயலவர் ஒருவர் அவசரகாலச் சேவைகளை அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த ஸ்மித் கவுண்டி ஷெரீஃப் துணை அதிகாரி ஒருவர், ஹல்லை நோக்கி வந்த பிட்புல் நாய்களில் ஒன்றை சுட்டுக் கொன்றார்.

இதனால், மற்ற இரண்டு நாய்களும் தப்பி ஓட, அவசர ஊழியர்கள் காயமடைந்த ஹல்லை அணுக முடிந்தது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். ஹல்லின் தாயார் ஜெனிஃபர் ஹப்பல் கூறுகையில், நாய்கள் தன் மகளிடம் அன்பாக இருந்ததாகவும், ஆனால் சமீபத்தில் அவற்றின் நடத்தையில் மாற்றம் இருந்ததாகவும் ஹல் தன்னிடம் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது, மேலும் உயிரோடு மீட்கப்பட்ட இரண்டு பிட்புல் நாய்கள் குறித்தும், அவற்றின் உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுமா என்பது குறித்தும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.