தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகை தரும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் அடிவாரப் பகுதியில், வடமாநில வியாபாரிகள் சிலர் புதிய மற்றும் வினோதமான யுக்தியில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து பழனிக்கு வந்துள்ள சுமார் 500க்கும் மேற்பட்டோர், பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் சில்லறை நாணயங்களைப் (Coins) பொட்டலங்களாகக் கட்டி, அதை வியாபாரக் கடைகளில் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகின்றனர்.
பழனிக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் வடமாநிலச் சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள், அவ்வாறு கிடைக்கும் நாணயங்களைச் சேகரித்து, ரூ. 95 மதிப்புள்ள நாணயங்களைக் கொண்ட பொட்டலங்களை உருவாக்குகின்றனர்.
இந்தப் பொட்டலங்களை அவர்கள் அருகில் உள்ள ஹோட்டல்கள், பொம்மைக் கடைகள் மற்றும் தள்ளுவண்டிக் கடைக்காரர்களிடம் ரூ. 100-க்கு விற்கின்றனர். இதன் மூலம், கடைக்காரர்களுக்குத் தேவையான சில்லறைகள் கிடைப்பதுடன், நாணயங்களை விற்பனை செய்யும் வடமாநிலத்தவருக்கு 5 ரூபாய் கமிஷனும் கிடைக்கிறது.
சில்லறை நாணயங்களுக்கு அதிக தேவை உள்ள இந்தப் பகுதிகளில், வடமாநிலத்தவர் பயன்படுத்தும் இந்த புதிய வியாபார யுக்தி தமிழக மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
