சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்தபோது, இரண்டு மாணவர்களைப் பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதிப் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11ஆம் வகுப்பு படிக்கும் கவின்குமார் மற்றும் மணி பாரதி ஆகிய இரண்டு மாணவர்கள் வகுப்பறைக் கதவைத் திறக்கும்போது, அங்கே பதுங்கியிருந்த பாம்பை தவறுதலாக மிதித்ததால் இந்தக் கடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாம்பு கடித்தவுடன் அலறிய இரண்டு மாணவர்களையும் ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மாணவர்களின் உடல்நிலையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்களைக் கடித்தது விஷமற்ற தண்ணீர்ப் பாம்பு என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், பள்ளி வளாகம் முறையாகப் பராமரிக்கப்படாமல் புதர்கள் மண்டிக் கிடப்பதே இதுபோன்ற விஷ ஜந்துக்கள் உள்ளே நுழையக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இனியாவது பள்ளி நிர்வாகமும், கன்னங்குறிச்சி பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து வளாகத்தைச் சுத்தப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.