பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள ஊழியர்களைக் காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, அடுத்த கட்டப் போராட்டத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தக் கோரிக்கைகள் குறித்துப் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ நடத்தியது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக வரும் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, டிசம்பர் 13-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டமும், டிசம்பர் 27-ஆம் தேதி வேலைநிறுத்த ஆயத்த மாநாடும் நடத்தவும் ஜாக்டோ-ஜியோ திட்டமிட்டுள்ளது.