உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த ஷோபா தேவி என்ற மூதாட்டி, நீண்ட நாள் உடல்நலக் குறைவால் முதியோர் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து மகன்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது, மூத்த மகன் எடுத்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர், “இப்போது வீட்டில் திருமணம் நடப்பதால், தாயின் உடலை வீட்டுக்குக் கொண்டுவந்தால் அபசகுனமாகும். எனவே, சடலத்தை நான்கு நாட்களுக்கு டீப் ஃப்ரீசரில் வைத்திருங்கள். திருமணத்திற்குப் பிறகு வந்து எடுத்துச் செல்கிறேன்” என்று முதியோர் இல்ல நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார். மகன் மறுத்ததால், வேறு குடும்ப உறுப்பினர்களை முதியோர் இல்ல ஊழியர்கள் தொடர்பு கொண்டனர். அவர்கள் வந்து சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ஷோபா தேவியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்குப் பதிலாக, குடும்பத்தினர் சடலத்தை புதைத்துவிட்டனர். நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் தோண்டி எடுத்து தகனம் செய்வதாக உறவினர்கள் கூறியதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷோபா தேவி முதியோர் இல்லத்தில் இருந்தபோது, இளைய மகன் மட்டுமே எப்போதாவது தொலைபேசியில் அழைத்துப் பேசுவார் என்றும், வேறு யாரும் அவரைச் சந்திக்க வரவில்லை என்றும் முதியோர் இல்ல நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் பலருக்கும் வேதனையை அளித்துள்ளது.
