விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கரடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி. இவரது மகள் பூவரசி (14), 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பூவரசி வீட்டில் சப்பாத்தி மற்றும் உருளைக்கிழங்கு குருமா சாப்பிட்டுவிட்டுத் தூங்கியதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு 11 மணியளவில் மாணவிக்குச் சற்று நெஞ்செரிச்சல் ஏற்பட்டதால் எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுத்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் மாணவி பூவரசிக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரைச் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், வழியிலேயே மாணவி பூவரசி பரிதாபமாக உயிரிழந்தார். சப்பாத்தி சாப்பிட்டதால் ஏற்பட்ட நெஞ்செரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.