சமூக வலைதளத்தில் ஏற்பட்ட நட்பினால் 17 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட வழக்கில், 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரங்கிப்பேட்டையை சேர்ந்த சிவக்குமாரின் மகன் விஷ்வா (20). கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு, இன்ஸ்டாகிராம் வாயிலாக புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தானாம்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, தனது கிராமத்திற்கு வருமாறு விஷ்வா அழைத்துள்ளார். அதன்படி கடந்த 19-ம் தேதி சிறுமி பரங்கிப்பேட்டை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள கோவிலில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமி மாயமானதாக பெற்றோர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமி பரங்கிப்பேட்டைக்கு சென்றது உறுதியாகத் தெரியவந்தது.

பின்னர் அங்கு சென்ற போலீசார் விஷ்வாவை கைது செய்தனர். சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட விஷ்வா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் நீதிமன்றத் தடுப்பில் அனுப்பப்பட்டார்.