புதுச்சேரியில் அதிமுகவின் முக்கிய முகமாக விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகிய இரண்டு நாட்களுக்குள் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலியார்பேட்டை தொகுதியில் 2011 முதல் 2021 வரை இரு முறை தொடர்ந்து வெற்றி பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் கட்சியை விட்டு விலகியிருந்தார்.
கட்சியிலிருந்து விலகிய பிறகு, புதுச்சேரியின் பாஜக மேலிடப் பொறுப்பாளரான நிர்மல் குமார் சுரானாவை பாஸ்கர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால், அவர் விரைவில் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் தற்போது பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பாஸ்கரின் இந்த இணைப்பு ஆளும் கூட்டணிக்கு மேலும் பலத்தைச் சேர்க்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
