டெல்லியின் ஒரு முன்னணி தனியார் கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவர், ஆசிரியர்களின் தொடர் உளவியல் தாக்குதல் காரணமாக மனமுடைந்து, கடந்த செவ்வாய்க்கிழமை ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை 7.15க்கு பள்ளிக்குச் சென்ற அந்த மாணவர், பிற்பகல் 2.34 மணிக்குத் தற்கொலை செய்துகொண்ட தகவல் பிற்பகலில் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது.

மாணவர் இறப்பதற்கு முன்னர் தனது புத்தகப்பையில் விட்டுச் சென்ற தற்கொலைக் கடிதத்தில், “சாரி மம்மி, நான் பலமுறை உங்கள் இதயத்தை உடைத்துவிட்டேன், இறுதியாக நான் இதை செய்வதற்கு என்னை மன்னித்துவிடுங்கள்” என்று உருக்கத்துடன் மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும், “என்னைப்போல் வேறு எந்த மாணவனும், இந்த முடிவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் இப்படிச் செய்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை” என்றும் அந்தக் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவனைப் பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்களும், பள்ளி முதல்வரும் தொடர்ந்து உளவியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. நாடகப் பயிற்சியின்போது, அந்த ஆசிரியர்கள் மாணவனை “ஓவரா நடிக்கிற” என்று அனைவர் முன்னிலையிலும் மிகவும் அவமானப்படுத்தி பேசியுள்ளனர். அப்போது பள்ளி முதல்வர் அருகிலிருந்தும் எதையும் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், தேர்வுக்குக் குறைந்த நாட்களே இருந்ததால், பெற்றோர் வேறு பள்ளியில் சேர்ப்பதாக உறுதி அளித்திருந்தபோதும், “உனக்கு இடமாற்றச் சான்றிதழ் வழங்கிவிட்டுப் பள்ளியிலிருந்து வெளியேற்றி விடுவேன்” என்று ஒரு ஆசிரியர் தொடர்ந்து மிரட்டி வந்ததே மாணவர் இந்த விபரீத முடிவை எடுக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் குறித்து மாணவனின் தந்தை பள்ளி நிர்வாகம் மற்றும் துன்புறுத்திய ஆசிரியர்கள் மீது புகார் அளித்துள்ளார். மாணவனின் கடைசி ஆசையான உறுப்புகளைத் தானம் செய்யக் கோரியதைச் சுட்டிக்காட்டிய காவல் துறையினர், புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.